Last Updated : 16 Nov, 2017 02:07 PM

 

Published : 16 Nov 2017 02:07 PM
Last Updated : 16 Nov 2017 02:07 PM

அரசு வழக்கறிஞர் நியமனம் தாமதம் ஏன்?- அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வழக்கறிஞர் நியமனம் 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய பணி. ஆனால் இதை மாதக்கணக்கில் இழுத்தடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.அசோக் பத்மராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மாவட்ட நீதிமன்றங்களில் அரசுக் குற்றவியல், உரிமையியல் வழக்கறிஞர்கள் நியமனங்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24- ன் கீழ் விதிப்படி நடைபெற வேண்டும். மாவட்ட நடுவர் ( மாவட்ட ஆட்சியர்), அமர்வு நீதிபதி ஆகியோர் ஆலோசித்து அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அப்பட்டியலில் இடம் பெறாதவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்ய முடியாது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இந்த விதியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத நிலையில், அரசு வழக்கறிஞர் பதவிக்கு நானும் விண்ணப்பித்தேன். பரிசீலனைக்குப் பிறகு எனது பெயர் உட்பட பலரது பெயரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் எனக்கு அரசியல் தொடர்பு இல்லாததால் அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்காத சிலர் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த பட்டியலில் உள்ளவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் போதுமான எண்ணிக்கையில் அரசு வழக்கறிஞர்கள் இல்லை. பணியில் இருப்பவர்களும் போதிய ஈடுபாட்டுடன் பணிபுரிவதில்லை. நகராட்சி, வீட்டுவசதி வாரியம் போன்ற அரசுத் துறைகளில் நியமிக்கப்படுபவர் வழக்குகளில் ஆஜராவதில்லை.

திறமையான வழக்கறிஞர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் நியமனத்தைப் பொறுத்தவரை அரசு செயல்படுகிறதா? இல்லையா? 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், தமிழக அட்வகேட் ஜெனரல் நவம்பர் 22ல் நேரில் ஆஜராகி,இது குறித்து விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x