Published : 06 Aug 2023 04:03 AM
Last Updated : 06 Aug 2023 04:03 AM

திருமழிசை அருகே நவீன திரைப்பட நகரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சியில், அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, டிஆர்ஓ அசோகன் உள்ளிட்டோர்.

திருவள்ளூர்: திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சியில், அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

நடப்பு 2023 - 24-ம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு அனாதினம் நிலம் 100 ஏக்கர் உள்ளது.

இந்த அரசு நிலத்தில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்க வசதியாக இருக்குமா என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திரைப்பட நகரம் அமைத்தால் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்ய முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

திரைப்பட நகரம் அமைப்பது குறித்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ. கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x