Published : 06 Aug 2023 04:05 AM
Last Updated : 06 Aug 2023 04:05 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் தனது கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்காக நேற்று அங்கு வந்திருந்த சிதம்பரம் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மணிப்பூர் மாநிலத்தில், 3 மாதங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை மத்திய அரசு கண்டிக்கவில்லை; தடுக்கவும் இல்லை.மோடி அரசு மீது அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
அதன் மீதான விவாதத்தின் போது பிரதமர் வாய் திறக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அப்போது அவரது உண்மை முகம் நாட்டுக்கு அம்பலமாகும். மதத்தின் பெயரால் முஸ்லிம்களை தேடித் தேடி வேட்டையாடுகின்றனர். மதத்தின் பெயரால் அவர்களை அந்நியப்படுத்து கின்றனர். விஹெச்பி, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹரியாணாவில் முஸ்லிம்களை தேடிச் சென்று தாக்குகின்றனர்.
‘முஸ்லிம்கள் மத அடையாளத்தை உதறிவிட்டு, மொழி அடையாளத்தை ஏற்க வேண்டும்’ என்று சீமான் போன்றவர்கள், தமிழ் தேசிய கருத்துகள் என்ற பெயரில் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கத்துக்கு துணை போகும் வகையில் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார் அமைப்புகள் எந்த விதமான வெறுப்பு பேச்சை பேசி வருகிறார்களோ, அதைப் போன்று வேறு பெயரில் இவர்கள் பேசிவருவது ஆபத்தானது.
மொழி உணர்வு, இன உணர்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தியா முழுவதும் முஸ்லிம் என்ற உணர்வும், கிறிஸ்தவர் என்ற உணர்வும் தான் அவர்களுக்கு பாதுகாப்பைத் தரும். அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம். இதே கருத்தை சீமான் போன்றவர்கள் பேசுவது அதிர்ச்சியை தருகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து சீமான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
என்.எல்.சி-க்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும். நிலம் வழங்கக் கூடிய விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் நிலம் வழங்கியவர்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT