Published : 01 Jul 2014 09:22 AM
Last Updated : 01 Jul 2014 09:22 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெ. கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் பிரதமருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுவதாவது:

முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி, மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய கொள்கைகளை, மத்தியில் வந்துள்ள புதிய அரசு அறிவிக்கும் என்று மக்கள் எண்ணிக்கொண்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 69 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக கடந்த 2 வாரங்களில் சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளதும்தான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தற்காலிகமானதுதான்.அதன் காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தற்காலிகக் காரணத்துக்ககாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

திரும்பப் பெற வேண்டும்

இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஜனவரி 2013 முதல் டீசல் விலையை லிட்டர்ஒன்றுக்கு மாதாமாதம் 50 காசு அளவுக்கு உயர்த்துவதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதன் அடிப்படையில் தற்போதும் மாதாமாதம் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 50 காசு என்ற அளவில் அதிகரிக்கப்படுகிறது.

இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை காரணமாக கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாற்றி அமைக்க வேண்டும்

நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அதனை இங்கு சுத்திகரிக்க ஆகும் செலவு, உள் நாட்டிலேயே உற்பத்தி ஆகும் கச்சா எண்ணெயை எடுக்க ஆகும் செலவு மற்றும் அதனை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, புதிய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு விரைந்து அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான், பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த இயலும். விலைவாசி ஏற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

பிரதமர் தலையிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x