என்எஸ்எஸ் தினமான செப். 24-ல் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி - ஒரு லட்சம் மாணவர்கள் களமிறங்குகின்றனர்
திருச்சி: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநி லங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப். 24-ம் தேதிஒ ரு கோடி பனை விதைகளை நடும்பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் தன்னார்வலர்களுடன், ஒரு லட்சம் என்எஸ்எஸ் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
நிலத்தடி நீரைச் சேமிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் பனை மரங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களின் எண் ணிக்கை முன்பு 50 கோடியாக இருந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் படிப்படியாக அழிவுக்குள்ளாகி, தற்போது 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் சேமிப்பை செறிவூட்டவும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நட தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நலவாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
16 மாவட்டங்களில்...: தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக் குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, புதுச்சேரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களில், கடற்கரை ஓரங்களில் 1,076 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை செப்டம்பர் 24-ம் தேதி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
கடல் அரிப்பை தடுக்கும்: பனை மரங்கள் கடல் அரிப்பைத் தடுக்கும். புயல் காற்றின் வேகத்தைக் குறைக்கும் என்பதால், கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நட தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப் பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ளசுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, கடற்கரை ஓரங்களில் 1,076 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தங்களது வளாகத்திலிருந்து 2 லட்சம் விதைகளை சேகரித்து வழங்குவதாகவும், தங்கள் மாணவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதேபோல, பல்வேறு தரப்பினரும் இப்பணியில் ஈடுபட முன்வந்துள்ளனர்’’ என்றார்.
மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம்.செந்தில்குமார் கூறும்போது, ‘‘நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப். 24-ம் தேதி, ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியில் தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் என்எஸ்எஸ் மாணவர்கள் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.
