

கோவை: கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனியில், புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மாநில தலைவரின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்களின் கருத்துகளை, குறைகளை கேட்டறிய நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இளைஞர்கள் அதிகமாக யாத்திரையில் பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. இது நடைபயணம் என எங்கும் சொல்லவில்லை. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களில் நடை பயணமாகவும், மற்ற இடங்களில் வாகனங்களில் செல்வதுமாக இப்பயணம் நடந்து வருகிறது. நடந்து சென்றால் குறிப்பிட்ட நாட்களில் பயணத்தை முடிக்க முடியாது என்பதால் வாகனத்தில் இருந்தபடி அண்ணாமலை மக்களுடன் உரையாடி வருகிறார்.
மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றாக பேசக்கூடியவர். கதை, வசனம் எழுதி திரைப்படம் எடுக்கக்கூடியவர் என்பதால் அவரது கருத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. பாஜக மாநிலத் தலைவருக்கு அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கு தருவதல்ல.
கட்சி தலைவராக மரியாதை அளிக்க வேண்டும். கூட்டணியை பாதிக்கும் கருத்துகளை அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.