

சென்னை: சர்வதேச கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி சென்னையில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 73,206 பேரிடம் இருந்து பதிவு கட்டணம் ரூ.3.42 கோடி கிடைத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4-வது ஆண்டு சர்வதேச கலைஞர்நினைவு மாரத்தான் போட்டி சென்னையில் நாளை (ஆக.6) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு மாரத்தான்உபகரணங்களை (ரன் கிட்) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2020-ல் கரோனா பரவல்காரணமாக, மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது. பதிவுக் கட்டணம் மூலம் கிடைத்த ரூ.23.42 லட்சம், அன்றைய அதிமுக அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டிலும் மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது. அப்போது பெறப்பட்ட ரூ.56.03 லட்சம், கரோனா பேரிடர்நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
கடந்த 2022-ல் கிடைத்த ரூ.1.22 கோடி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதியகட்டிடம் கட்டுவதற்காக முதல்வரிடம் வழங்கப்பட்டது. வெளியூரில்இருந்து சிகிச்சைக்கு வருவோர் தங்குவதற்கான இக்கட்டிடம் கட்டும் பணி, அரசு சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.5.89 கோடியில் நடந்து வருகிறது.
போட்டி 4 பிரிவாக நடைபெறும்
இந்நிலையில், இந்த ஆண்டு சர்வதேச கலைஞர் நூற்றாண்டுமாரத்தான் போட்டி சென்னையில்நாளை (ஆக.6) அதிகாலை 4 மணிக்குதொடங்குகிறது. உலகிலேயே முதல்முறையாக திருநங்கைகள் 1,063 பேர் உட்பட மொத்தம் 73,206பேர் பங்கேற்கின்றனர். அந்த வகையில், இப்போட்டி கின்னஸ் சாதனை படைக்க உள்ளது.
இதில் 9 பிரிவுகளாக மொத்தம் ரூ.10.70 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசு வழங்கும் விழாவில் முதல்வருடன் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்க உள்ளனர்.
திருநங்கைகளுக்கு பதிவு கட்டணம் ரூ.100. மற்றவர்களுக்கு ரூ.500. இதில் கிடைக்கும் ரூ.3.42 கோடியை விழா மேடையில் முதல்வரிடம் வழங்க உள்ளோம். இத்தொகையுடன், நமக்கு நாமே திட்டநிதியையும் சேர்த்து, மொத்தம் ரூ.10 கோடியில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. தூரம் என 4 பிரிவாக போட்டி நடக்கிறது. இப்போட்டிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அனைத்து பிரிவுகளும் மெரினா அண்ணா நினைவிடத்தில் தொடங்கி தீவுத்திடலில் நிறைவடையும். இதையொட்டி, அப்பகுதிகளில் நாளை அதிகாலை 3 மணிமுதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.