Published : 05 Aug 2023 06:26 AM
Last Updated : 05 Aug 2023 06:26 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: கனடாவில் நடந்து வரும் உலக காவல்துறை தடகளப் போட்டியில் கலந்து கொண்ட சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார்.
சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை முகாமில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் காவல் துறையினருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக காவல் துறை தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு 2019-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல் 2022-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற உலக காவல் துறை தடகளப் போட்டியிலும் இதேபிரிவில் தங்கம் வென்றார்.
இந்நிலையில் தற்போது கனடா நாட்டில் உலக காவல் துறை தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, 5 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் முதலிடம் பெற்று 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். அவருக்கு காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT