Published : 06 Nov 2017 02:02 PM
Last Updated : 06 Nov 2017 02:02 PM

தினத்தந்தி பவள விழாவில் மோடி உரையின் 8 முக்கிய அம்சங்கள்

தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி பேச்சின் சில முக்கிய அம்சங்கள்:

>> உலகளவில் இயற்கை சீற்றங்கள் அதிகளவில் அரங்கேறுகின்றன. பருவநிலை மாறுதலுக்கு எதிரான போரில் ஊடகங்கள் பங்களிப்பு முக்கியமானது. ஊடகங்கள் அதற்கு முன்மாதிரியாக இருக்குமா? பருவநிலை மாறுதலை எதிர்கொள்வது தொடர்பான செய்திகளை அன்றாடம் பதிவு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் ஒரு சிறிய பகுதியேனும் ஒதுக்குமா?

>>  இன்று இந்திய ஊடகங்கள் பலவும் அரசியலையே பிரதமானமாக சுற்றிவருகின்றன. இந்தியா என்பது அரசியலைத் தாண்டியும் இருக்கிறது. இந்திய தேசம் அரசியல்வாதிகளைத் தாண்டியும் முக்கியமானது. 125 கோடி இந்தியர்கள்.. இவர்கள்தான் இந்தியாவின் அடையாளம். அத்தகையோரின் கதைகளிலும் சாதனைகளிலும் ஊடகங்கள் கவனம் செலுத்தினால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

>>  இன்று பல வழிகளிலும் செய்திகள் வருகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை குடிமக்கள் ஒவ்வொருவரும் உறுதி செய்கின்றனர். எனவே, செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஊடகங்கள் சற்று கூடுதலான முயற்சியை முன்வைக்க வேண்டும்.

>> ஊடகங்களுக்கு தனிநபர்கள் முதலாளிகளாக இருந்தாலும் அவை பொதுநலனுக்கானவையே. கற்றறிந்த சான்றோர்கள் கூறுவதுபோல், அழுத்தத்தின் வாயிலாக அல்லாமல் அமைதியின் வாயிலான சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் கருவியாக இருக்க வேண்டும். எனவே, நீதித்துறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகியனவற்றுக்கு உள்ள அதே பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கிறது.

>> ஊடக சுதந்திரம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். எழுத்து சுதந்திரம் தவறான கருத்துகளை பரப்பும் சுதந்திரம் அல்ல. "ஊடகத்துறை தேசத்தின் நான்காவது அரண். அதற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. ஆனால், அந்த சக்தியை தவறாக பயன்படுத்துவது கிரிமினல் குற்றமாகும்" என மகாத்மா காந்தி கூறியிருப்பதாக மோடி சுட்டிக்காட்டினார். 

>> 'ஒரு செய்தித்தாளுக்கு தேவையான அளவுக்கு அன்றாடம் இவ்வுலகில் அத்தனை நிகழ்வுகள் நடைபெறுகின்றனவே என மக்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்' என கேலியாக பிரதமர் கூறினார்.

>> பிராந்திய மொழி பத்திரிகைகளைப் பார்த்து அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அஞ்சியது. அந்த அச்சத்தின் வெளிப்பாடகாவே 1878-ல் பிரிட்டிஷ் அரசு சட்டம் கொண்டுவந்தது. அந்த வகையில், இன்றளவும் பிராந்திய பத்திரிகைகளின் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றன.

>> இன்றைய செய்தித்தாள்கள், செய்திகளை மட்டுமே தருவதில்லை. நமது சிந்தனைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும் புதிய உலகைக் காண்பதற்கான வழியாகவும் இருக்கின்றன. ஊடகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அதனால்தான் அதை நாம் தேசத்தின் 4-வது தூணாகக் காண்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x