Published : 27 Nov 2017 10:26 AM
Last Updated : 27 Nov 2017 10:26 AM

மரபுக்கும் புதுமைக்கும் கவிதையால் பாலம் அமைத்தவர் ஈரோடு தமிழன்பன்: கவிதை நூல் வெளியீடு விழாவில் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் புகழாரம்

‘மரபுக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்’ என்று ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி எசன்ஸியல் ஈரோடு தமிழன்பன்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கவிஞர் ஈரோடு தமிழன்பன் மற்றும் நூலின் தொகுப்பாசிரியர் அமிர்தகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது: நாம் நினைக்கும் அனைத்தையும் வார்த்தைகளில் கொண்டுவர முடியாது. வார்த்தைகளின் பற்றாகுறையால் மொழிப்பெயர்ப்பில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நல்ல கவிதைகள் பல மோசமான மொழிபெயர்ப்பால் தோல்வி அடைந்து இருக்கின்றன. அதேசமயம், எந்த ஒரு கவிதை மோசமான மொழிப்பெயர்ப்பிலும் வெற்றி பெறுகிறதோ அது சிறப்பான கவிதை.

அந்த வகையில் ஈரோடு தமிழன்பனின் கவிதை எப்படி மொழிப்பெயர்த்தாலும் அவை என்றென்றும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. ஈரோடு தமிழன்பன் மரபுக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நூலின் முதல் பிரதியை நல்லகண்ணு வெளியிட, கவிஞர் ஒளிவண்ணன் பெற்றுக்கொண்டார். இதையடுத்து விழாவில் நல்லகண்ணு பேசும்போது, ‘மக்களின் உணர்வுகளை உளச்சான்றுடன் வெளிப்படுத்தும் தைரியம் கொண்டவர்களே உண்மையான கவிஞர்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துணிச்சலுடன் கவிதை பாடியவர் பாரதியார். பாரதி உயிருடன் இருக்கும்போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதேபோன்று தான் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் தமிழகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. ஆனால், இவரின் சிறப்பை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் தமிழன்பனுக்கு ‘மகாகவி’ என பட்டம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது’ என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, ‘பிளாட்டோ என்ற கவிஞன் இல்லாவிட்டால் சாக்ரடீஸ் என்ற மாமேதையை நாம் அறியாமல் சென்றிருப்போம். உணர்ச்சிகள் எண்ணங்கள் ஆக வேண்டும். எண்ணங்கள் வார்த்தைகள் ஆக வேண்டும். வார்த்தைகள் கவிதைகள் ஆக வேண்டும். அப்போதுதான் அவை நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். அந்த வகையில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதை நீண்ட காலம் நிலைத்து இருக்கும்’ என்றார்.

இந்த விழாவில் அமெரிக்காவில் உள்ள டேலஸ் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ‘மகாகவி’ பட்டம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x