Published : 22 Nov 2017 03:37 PM
Last Updated : 22 Nov 2017 03:37 PM

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக தாரை வார்ப்பு

 

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்குவதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடற்கரையைப் பாதுகாக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 20 ரோந்துக் கப்பல்கள் வரையிலும் அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டிற்காக இலங்கைக் கடற்படைக்கு 30 ஆண்டுகள் சேவையாற்றி வந்த இந்திய கடலோர காவல்படையின் வருணா ரோந்துக் கப்பலை இலங்கைக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ''இந்திய அரசிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்திய கடலோரக் காவல்படையினரால் பயன்படுத்தப்பட்ட வருணா ரோந்துக் கப்பலினை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக பெற்றுக் கொள்வது என ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் சி.ஆர்.செந்தில்வேல் கூறுகையில், ''தனது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை கடற்படைக்கு இலவசமாக கப்பல் வழங்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரையிலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உடல் உறுப்புகளையும் இழந்து படுகாயமுற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து வாங்கப்பட்ட, நன்கொடையாக பெறப்பட்ட கப்பல்களைக் கொண்டே இலங்கையின் கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது அன்றாடச் செய்திகளாகி விட்டது. எனவே வருணா ரோந்துக் கப்பலை தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x