Published : 13 Nov 2017 10:14 AM
Last Updated : 13 Nov 2017 10:14 AM

பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் பணிகள் தீவிரம் ; மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலரின் அதிரடி உத்தரவு: ஆளுங்கட்சியினரின் ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகள் அகற்றம்:

பக்கிங்ஹாம் கால்வாய் கரையை ஆக்கிரமித்துள்ள ஆளுங்கட்சியினரின் இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அவற்றை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் முதல் கல்பாக்கம் வரையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் கரையை ஆக்கிரமித்து பல்வேறு இடங்களில், மீன்வளத் துறை அனுமதியின்றி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கடலோர கிராமங்கள் மற்றும் கால்வாயையொட்டியுள்ள கிராமங்களில் சேகரமாகும் மழைநீர் கால்வாயை சென்றடையாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இது தொடர்பாக, ‘தி இந்து’ நாளிதழில் கடந்த 6-ம் தேதி செய்தி வெளியிட்டது. இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகள் அகற்றப்பட்டன.

எனினும், மற்ற பகுதிகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கரையை ஆக்கிரமித்துள்ளதால், இறால் பண்ணைகளை அகற்ற வருவாய் துறையினர் தயக்கம் காட்டுவதாகவும் அதனால் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொடர் செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா, பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அகற்றி, மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதியின் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் உள்ள 12 ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அகற்றும் பணியில், வருவாய் ஆய்வாளர் நாராயணன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

இறால் பண்ணைகள், மாமல்லபுரத்தில் வசிக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமானவை எனக் கூறப்படுகிறது. இதனால், இறால் பண்ணைகளை அகற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியதாகவும், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருவாய்த் துறையினர் சிலர் கூறும்போது, “இறால் பண்ணைகள் அனைத்தும் 8 முதல் 10 அடி ஆழம் கொண்டவையாக உள்ளன. மேலும், பண்ணையை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் இயந்திரம் மூலம் பண்ணைகளின் கரைகளை உடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஆட்கள் மூலம் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் மற்ற பகுதியில் உள்ள பண்ணைகளும் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டதால், பண்ணையில் வளர்க்கப்பட்ட இறால்களைப் பிடித்து சென்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x