Published : 19 Nov 2017 08:31 am

Updated : 19 Nov 2017 08:31 am

 

Published : 19 Nov 2017 08:31 AM
Last Updated : 19 Nov 2017 08:31 AM

பிரதமர் மோடியின் தமிழாக்க கவிதை நூல் வெளியீட்டு விழா: தேச ஒற்றுமைக்காக மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

தேச ஒற்றுமைக்காக மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய கவிதைகளை, “சிந்தனை களஞ்சியம்” என்ற பெயரில் சமஸ்கிருதப் பேராசிரியை ராஜலட்சுமி சீனிவாசன் தமிழாக்கம் செய்துள்ளார். இந்த புத்தகத்தை ரூபா பதிப்பகம் வெளியிடுகிறது. இதன் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “எங்கள் கட்சித் தலைவரை, நாட்டின் பிரதமரை இந்த கவிதை நூல் மூலம் புதுவிதமாகப் பார்க்கிறோம். விமர்சனத்துக்கு செவி சாய்ப்பார். அதற்காக விளக்கம் அளிக்காமல் தேவையான சீர்திருத்தங்களை அமைதியாகச் செய்வார். ‘தலைகுனிந்து நிற்கும்படி நான் எதையும் செய்யமாட்டேன்’ என்று ஒரு கவிதையில் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றை இயற்கையோடு ஒப்பிட்டு அவர் கவிதையாக கொடுத்திருப்பது சிறப்பு” என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “தமிழ்நாட்டுக்கு வந்தபோது உடல் நலம் தேறி வரும் முத்தமிழ் அறிஞர் கருணாநியை சந்தித்த அரசியல் நாகரீகம், நாட்டின் பாதுகாப்பை ஞானமும், ஆற்றலும் கொண்ட ஒரு பெண்ணிடம் (நிர்மலா சீதாராமன்) கொடுத்தது, இந்த கவிதைப் புத்தகத்தின் தலைப்பில் தன் பெயர் வராமல் “சிந்தனைக் களஞ்சி யம்” எனப் பெயர் சூட்டிய தன்னடக்கம் ஆகிய மூன்றுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடியை மனதாரப் பாராட்டுகிறேன். தேச ஒற்றுமைக்காக மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்” என்றார்.

இந்த விழாவில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் வைத்யா சுப்பிரமணியம், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். முன்னதாக, ரூபா பதிப்பகத்தின் மண்டல மேலாளர் ராஜேந்திர தாஸ் வரவேற்றார், நிறைவில், சென்னை கிளை மேலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார். இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author