Last Updated : 13 Nov, 2017 04:26 PM

 

Published : 13 Nov 2017 04:26 PM
Last Updated : 13 Nov 2017 04:26 PM

கொடைக்கானல், பெரியகுளம் மீன்களைச் சாப்பிடுகிறீர்களா?- அதிகளவு பாதரச கழிவுகள் இருப்பதாக ஐஐடி ஆய்வு எச்சரிக்கை

கொடைக்கானல் ஏரி மீன்களிலும், பெரியகுளம் கண்மாய் மீன்களிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதரசம் அதிகளவில் இருப்பது ஹைதராபாத் ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெர்மா மீட்டர் தொழிற்சாலை

கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில், 1984 முதல் தெர்மா மீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவந்தது. இங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு தோல் பாதிப்பு உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்பட்டதால், கடந்த 2001ல் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூடப்பட்டத் தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளை அகற்றும் பணிகளை உலகத் தரத்தில் நடத்தவேண்டும் என தமிழக பாதரச எதிர்ப்பு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். நீதிமன்றங்களிலும் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தில்லி ஐஐடி, லக்னோ தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம், உதகை மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து அளித்த ஆய்வறிக்கையின்படி, பாதரசக்கழிவுகளை சோதனை அடிப்படையில் அகற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், இந்தப் பணிகள் இன்னமும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

இந்த நிலையில், கொடைக்கானல் ஏரி மற்றும் பெரியகுளம் கண்மாயில் பிடிக்கப்பட்ட மீன்களில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பாதரசம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக மக்கள் சிவில் உரிமைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில செயலாளர் இரா.முரளி, கொடைக்கானல் பாதரச மாசை அகற்றுவதற்கான பிரச்சார இயக்க நிர்வாகி நித்யானந்த் ஜெயராமன் ஆகியோர் மதுரையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

மீனில் பாதரசம்

கொடைக்கானல் பகுதியில் பாதரசக் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஹைதராபாத் ஐஐடியின் பேராசிரியர் அசிப் குவார்ச்சி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், கொடைக்கானல் ஏரி, கும்பக்கரை அருவியை உருவாக்குகிற பாம்பாறு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் மிகமிக அதிகமாக பாதரசக் கழிவு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கும், கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கும் அவர் கடந்த 2.8.17 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்த நீர்நிலைகளிலும், இந்த நீரைப்பெறுகிற பெரியகுளம் கண்மாயிலும் உள்ள மீன்களைச் சாப்பிடுவதைக் குறைக்குமாறு அப்பகுதி மக்களை அரசு நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், 3 மாதமாகியும் அரசு நிர்வாகங்கள் அவ்வாறு செய்யாததால், மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக நாங்களே இதனை அறிவிக்கிறோம்.

ஒரு கிலோ எடையுள்ள மீனில், 30 மைக்ரோ கிராம் பாதரசம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று அமெரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, தர நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கொடைக்கானல் ஏரியில் பிடிபட்ட 8 மீன்களைப் பிடித்து சோதித்தபோது, அதில் நான்கு மீன்களில் 41.9 மைக்ரோ கிராம் வரையில் பாதரசம் காணப்பட்டது. கும்பக்கரை அருவியில் இருந்து நீரைப்பெறுகிற கண்மாய் ஒன்றில் பிடித்த மீனை சோதித்தபோது, அதில் 94 முதல் 165 மைக்ரோ கிராம் வரையில் பாதரசம் காணப்பட்டது.

பாதரசக் கழிவானது நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையையும் சேதப்படுத்தக்கூடியது. சிறுநீரகத்தையும் பாதிக்கும். பாதரசமானது உயிரினங்களால் உட்கொள்ளப்படும்போது, அது மெத்தைல் பாதரசமாக மாறுகிறது. அந்த வடிவில்தான் இப்பகுதியில் பிடிபடும் மீன்களில் பாதசரம் காணப்படுகிறது. இது சாதாரணப் பாதரசத்தைக் காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்டது. கர்ப்பிணிகள் சாப்பிட நேர்ந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும்” என்றனர்.

இதற்கு என்ன தீர்வு என்று நிருபர்கள் கேட்டபோது, “கொடைக்கானல் மண்ணில் உள்ள பாதரசத்தை சுத்திகரிப்பதற்கான தர அளவை, கம்பெனியின் உரிமையாளரான யுனிலீவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் உள்ள தர அளவைவிட, கொடைக்கானலில் 20 மடங்கு அதிகமான பாதரசக் கழிவுகளை அந்நிறுவனம் விட்டுச்செல்லும் என்று தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிப்பது சரியல்ல. எனவே, ஆலை வளாகத்தைச் சுத்திகரிப்பதற்கு மேலும் கடுமையான தர நிர்ணயத்தை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்பந்திக்க வேண்டும். மக்களும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர். பேட்டியின்போது சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x