Published : 04 Aug 2023 10:08 AM
Last Updated : 04 Aug 2023 10:08 AM

மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்

அன்வர் ராஜா | கோப்புப் படம்

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று (ஆக.4) மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் வந்த அன்வர் ராஜா கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

குறள் கூறி விளக்கிய அன்வர் ராஜா: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்வர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறு சறுக்கலுக்குப் பின்னர் நான் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன்.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்" என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.” என்று கூறினார். (குறள் விளக்கம்: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்)

இபிஎஸ் அறிக்கையும் அன்வரின் வருகையும்.. முன்னதாக கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அன்வர் ராஜா மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அதிமுக கூட்டம்: இன்று (ஆக.4) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஜூலை 5-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது, இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவும் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட தொடங்கியுள்ளது. இதனை ஒட்டியே அதிமுகவும் ஒரு மாத இடைவெளியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த அன்வர் ராஜா? அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறார். மிகச் சிறந்த சொற்பொழிவாளரும் கூட. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். 1986 உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். கடந்த 2001 முதல் 2006 வரை தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில் அதிமுக தனது பலத்தை நிரூப்பிக்க உள்ளூரில் செல்வாக்கு பெற்ற அன்வர் ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x