

கடலூர்: நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்க கன்வேயர் பெல்டில் தீப்பிடித்து இயந்திரம் எரிந்தது.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலமாக மின்உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கன்வேயர் பெல்ட்டில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இரு கன்வேயர் பெல்ட் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ அருகில் இருந்த ராட்சத இயந்திரத்துக்கும் பரவியது. அது தீப்பிடித்து எரிந்ததால் சுரங்கம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து.
தொழிற்கூட தீயணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் கூறியதாவது:
கடந்த 9 நாட்களாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுகின்றன.
சரியான பராமரிப்பு இல்லாததாலும் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.