

சிவகாசி: சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சகத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு, 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புத்தகம் மற்றும் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் காலண்டர் விற்பனை நடைபெறும் என்றாலும், ஆடிப்பெருக்கு அன்று பலர் காலண்டர்களை ஆர்டர் செய்வர்.
அதனால், சிவகாசியில் உள்ள அனைத்து காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆடிப்பெருக்கு அன்று பூஜை செய்து, அடுத்த ஆண்டுக்குரிய காலண்டரில், புதிய டிசைன் மற்றும் கூடுதல் தகவல்களுடன் ஆல்பம் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்பின், காலண்டர் உற்பத்தி பணி வேகமெடுக்கும்.
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி உயர்வு, அச்சு மை, ஆர்ட், லித்தோ பேப்பர் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காலண்டர் விலை 35 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் காலண்டர் விற்பனையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி, காலண்டர் உற்பத்தி நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. இதில் கடிகாரத்துடன் கூடிய டேபிள் காலண்டர், ஒளிரும் கற்கள் பதிக்கப்பட்ட சுவாமி பட காலண்டர் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தாண்டில் புதிதாக க்யூஆர் கோட்டுடன் வடிமைக்கப்பட்டுள்ள தினசரி நாட்காட்டியில், ஸ்கேன் செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, நட்சத்திரம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டால், பஞ்சாங்க பலன்கள் கிடைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்ட் பிரின்டிங் மூலம் தேவையான புகைப்படங்களுடன் காலண்டர் வடிமைக்கப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொழில்துறையினர் மற்றும் விற்பனையாளர்கள் காலண்டருக்கு ஆர்டர் கொடுத்து விட்டுச் சென்றதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் மின் கட்டண உயர்வால் காலண்டர் விலை 5 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு விற்பனை 15% குறைந்தது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால், அரசியல் கட்சிகளின் ஆர்டர் அதிகரித்து உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.