Published : 04 Aug 2023 05:23 AM
Last Updated : 04 Aug 2023 05:23 AM

திருச்சி, பவானி கூடுதுறை உள்ளிட்ட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற காவிரி தாய்க்கு நம்பெருமாள் சீர்கொடுக்கும் நிகழ்ச்சி

திருச்சி/ஈரோடு: தமிழகத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றின் கரைகளில் பெண்கள், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் திரளாக கூடி, சிறப்பு பூஜை செய்து காவிரித் தாயை வழிபட்டனர்.

ஆண்டுதோறும் காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆடி மாதத்தின் 18-ம் நாளன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஆடி 18-ம் நாளான நேற்று திருச்சி மற்றும் ரங்கம் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து காவிரி தாய்க்கு வாழை இலையில் பல்வேறு வகையான பழ வகைகள், பூஜை பொருட்கள், காப்பரிசி, காதோலை கருகமணி, முளைப்பாரி வைத்து படையலிட்டு வழிபட்டனர்.

புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். சுமங்கலி பெண்கள் புதிதாக மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் விரைவில் திருமணம் நிகழ வேண்டி மஞ்சள் நூலைக் கட்டிக் கொண்டனர்.

பொதுமக்கள் ஆடிப்பெருக்கை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத் துறையினர் முக்கியமான இடங்களில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பவானி கூடுதுறை: இதேபோன்று, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். காவிரி படித்துறையில், பழங்கள், தானியங்கள் மற்றும் முளைப்பாரிகளை வைத்து வழிபாடு செய்தபின், அவற்றை காவிரித் தாய்க்கு சமர்ப்பணம் செய்து வணங்கினர்.

பின்னர் சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.

காவிரி தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் ஆடி 18 அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் காவிரி கரையில் காவிரித் தாய்க்கு சீர் கொடுப்பது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு ஆடி 18-ம் தேதியான நேற்று நம்பெருமாள் கோயில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி முற்பகல் 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தை சேர்ந்தார்.

அங்கு, நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 4 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன்பின், காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறையிலிருந்து காவிரி தாய்க்கு சீர் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றிக் கொண்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x