Published : 04 Aug 2023 05:46 AM
Last Updated : 04 Aug 2023 05:46 AM
ஈரோடு/சென்னை: ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கொண்டலாம்புதூர் காலனியில் மதுரை வீரன் கோயில் திருவிழா நடந்து வருகிறது.
இதையொட்டி, காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன்கள் குப்புராஜ் (19), சவுத்ரி (14), சிவகுமார் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (18) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் வெங்கம்பூர் வந்துள்ளனர்.
காவிரியில் இறங்கி மையப்பகுதிக்குச் சென்று குளித்து விட்டு, குடத்தில் தீர்த்தம் எடுத்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற மூவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்து வந்த கொடுமுடி தீயணைப்புத்துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், சவுத்ரி, குப்புராஜ் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. ஜெகதீஸ்வரனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த குப்புராஜ் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சவுத்ரி 9-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். காவிரி நீரில் மாயமான ஜெகதீஸ்வரன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT