

உடுமலை: உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் தக்காளி, கத்தரி, வெண்டை, பீட்ரூட், மிளகாய், பந்தல் காய்கறிகள், கீரைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய விலை இல்லாததால், பலரும் நீண்ட கால பயிரான தென்னை, பாக்கு, மா உள்ளிட்ட இதர மரப்பயிர் சாகுபடியில் ஈடுபடத் தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்பு தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் பாதிப்படைந்தனர். இதனால், தக்காளி பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தக்காளி கிலோ ரூ.150-க்கும் மேல் விற்பனையாகி வருவதால், உடுமலையில் விவசாயிகள் பலரும் தக்காளி சாகுபடியில் மீண்டும் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உடுமலை கோட்டத்தில் இரு வகையான ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கோட்ட அளவில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் தற்போது தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. இவை 70 நாட்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். சராசரியாக 15 முறை அறுவடை மேற்கொள்ளப்படும். ஓர் ஏக்கருக்கு 60 டன் வரை விளைச்சல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.