Published : 28 Nov 2017 10:37 AM
Last Updated : 28 Nov 2017 10:37 AM

மயில் கொடுத்த தோகை.. மாட்டிக் கொண்ட வாத்து!- பொம்மலாட்டத்தில்புத்தி சொல்லும் ஆசிரியர்

சி

ல பேர், பணியில் இருக்கும் போதே தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற மாட்டார்கள். ஆனால், ஆசிரியர் மூ.சீனிவாசன் பணி ஓய்வுக்குப் பிறகும் பள்ளிக் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிறார் - ஒரு பொம்மலாட்ட கலைஞராக!

தானே செய்த பொம்மைகள், அதனுடன் கொஞ்சம் திரைச் சீலைகள், சிறிய இரும்புச் சட்டங்கள், டேப் ரெக்கார்டர், ஒலி வாங்கி, ஒலி பெருக்கி இத்தனையையும் தனது காருக்குள் திணித்துக் கொண்டு ஊர், ஊராக பள்ளிக்கூடங்களைத் தேடிச் செல்கிறார் சீனிவாசன். எந்தப் பள்ளிக்கூடத்தில் தனது பொம்மலாட்ட ‘ஷோ’வை நடத்த வேண்டுமோ அங்கு போனதும், தான் கொண்டு போன பொருட்களை எல் லாம் வைத்து தனக்கான மினி பொம்மலாட்ட கலையரங்கத்தை அழகாக உருவாக்கிவிடுகிறார்.

வரிசையாய் பொம்மைகளை நிறுத்தி..

பிறகு, பொம்மைகளை வரிசையாய் தேவைக்கேற்றபடி அந்தக் கலையரங்குக்குள் ‘செட்’ செய்கிறார். சற்று நேரத்தில் டேப் ரெக்கார்டரில் ‘மாயி மகமாயி..’ என பாடல் ஒலிக்க, அதற்கேற்ப பொம்மலாட்ட கலையரங்கில் வேப்பிலையும் கையுமாய் ஒரு பெண் பொம்மையை ஆட்டுவிக்கிறார் சீனிவாசன்.

அடுத்ததாக, கலையரங்கில் நூலகம் காட்சிப்படுத்தப்படுகிறது. அங்கே புத்தகம் வாசிக்க வந்த ஆண் பொம்மை ஒன்று, ‘புத்தகத்தை படிக்கணும்; புத்தியைத் தான் வளர்க்கணும்!’ என்ற பாடலுக்கு ஏற்ப உடல் மொழி பேசுகிறது. இப்படியே, ரத்ததானம், கண் தானம், மின்சாரச் சிக்கனம் குறித்தெல்லாம் பாடல்களும் வசனங்களும் டேப் ரெக்கார்டரில் ஒலிக்க, அத்தனைக்கு ஏற்பவும் பொம்மைகளை நடிக்க வைக்கிறார் சீனிவாசன்.

வாத்து சொல்லும் கதை

நிறைவாக, ‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே!’ என நீதி போதனை சொல்ல வாத்துகள் வருகின்றன. கருமேகம் சூழ்கிறது. மழை பொழிய தயாராகிறது வானம். அப்போது மயில் ஒன்று தோகை விரித்து ஆடுகிறது. இதைப் பார்க்கும் வாத்து ஒன்று மயில் தோகைக்கு ஆசைப்படுகிறது. ‘மயிலே, மயிலே எனக்கு அந்த தோகையை தருவாயா’ எனக் கேட் கிறது. மயிலும் தட்டாமல் தனது தோகையைக் கொடுக்க, அதை ஆசையுடன் வாங்கி கட்டிக் கொள்கிறது வாத்து.

மயில் தோகை கிடைத்த மகிழ்ச்சியை ஆடிப்பாடி கொண்டாடுகிறது வாத்து. அப்போது, நரி ஒன்று வாத்துக் கூட்டத்தை வேட்டையாட வருகிறது. இதைப் பார்த்துவிட்டு சக வாத்துகள் எல்லாம் ஓடிவிட, மயில் தோகை கட்டிக்கொண்ட வாத்து மட்டும் ஓடவும் முடியாமல் பறக்கவும் முடியாமல் தவிக்கிறது. இதனால், வேட்டைக்கு வந்த நரியிடம் அகப்பட்டு கொள்கிறது அந்த வாத்து. இதை பார்த்துவிட்டு பதறும் மற்ற வாத்துகள், ‘அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு இப்படி அகப்பட்டுக் கொண்டதே இந்த வாத்து’ என ஆதங்கப்படுகின்றன.

உடனே, அந்த வாத்துகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வந்து நரியைத் துரத்தியடித்து அந்த வாத்தை காப்பாற்றுகின்றன. அப்போதே மயில் தோகையை மயிலிடம் கழற்றிக் கொடுக்கும் அந்த வாத்து, ‘பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால் எனக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்’ என இந்த நீதி போதனை நாடகத்தைப் ரசித்துக் கொண்டிருக்கும் பள்ளிச் சிறுவர்களைப் பார்த்துப் பாடுகிறது.

ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்தவர்

இப்படி, மொத்தம் 30 பொம்மலாட்டக் கதைகளை, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்துக்கு ஒற்றையாளாக நடத்திக் காட்டும் சீனிவாசனுக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வடுகபாளையம். துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றவர். பணிக் காலத்தின் போது, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆடல், பாடல் மூலம் பாடம் சொன்னவர். கற்றலின் இனிமை குறித்து மற்ற ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க இவரை பயன்படுத்திக் கொண்டது மாவட்ட கல்வித்துறை.

ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்த சமயத்தில், குழந்தைகளுக்கு பொம்மை கள் செய்யவும் கற்றுக்கொடுத்தார் சீனிவாசன். இதையடுத்து, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும் பயிற்றுநராகவும் இவர் நியமிக்கப்பட்டார். இத்தனையும் கற்றவர், ஓய்வு பெற்ற பின் சும்மா இருக்க முடியுமா? அதுதான் நடமாடும் பொம்மலாட்ட கலையரங்கத்தைத் தூக்கிக்கொண்டு பள்ளிகள், நூலகங்கள், பொதுநிகழ்ச்சிகள் என ஊர் ஊராய்ச் சென்று கொண்டி ருக்கிறார். இதற்காக போக்குவரத்துச் செலவு போக, வெறும் 500 ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கிக் கொள்கிறார்.

இப்படித்தான் கட்டமைத்தேன்

தற்போது கோவை, கோவைபுதூரில் தனது பேரன் சதீஷ் வீட்டில் வசிக்கும் சீனிவாசனை சந்தித்துப் பேசினோம். “தலைமை ஆசிரியராக பணியில் இருந்தபோது, பொம்மலாட்ட கலையை கற்றுத் தருவதாகச் சொல்லி என்னை டெல்லிக்கு அழைத்தார்கள். எனக்கு நேரம் இல்லாததால் நான் போகாமல் எனது அசிஸ்டென்ட் மணிவண்ணனை அனுப்பினேன். அவர், கை கட்டை விரல்களில் பொம்மை உருவங்களை வரைந்து, அவை பாடற மாதிரி, பேசற மாதிரி கத்துட்டு வந்தார்.

அதை நானும் கத்துக்கிட்டேன். வெறுமனே விரலில் இப்படிச் செய்வதைவிட பொம்மைகளை வெச்சு செஞ்சா நல்லா இருக்குமேனு தோணுச்சு. அதுக்காவே இந்த பொம்மலாட்ட ‘செட்’டை உருவாக்கிட்டேன். நானே உருவாக்கிய இந்தப் பொம்மைகளுக்கு ஏற்ற கதைகள், பாடல்களை உருவாக்கி பதிவு செஞ்சேன். ஒரு சில பாடல்களை வெளியிலிருந்தும் எடுத்துக்கிட்டேன்” என்றார் சீனிவாசன்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒருமுறை பொம்மலாட்ட ஷோ போட்ட ஸ்கூலுக்கு மறுபடி நான் போற தில்லை. ஆனா, என்னோட ‘ஷோ’வைப் பார்த்த குழந்தைகள், ‘பொம்மலாட்ட தாத்தா.. மறுபடியும் எங்க ஸ்கூலுக்கு எப்ப வருவீங்க’ன்னு எனக்கு லெட்டர் போடுறாங்க. பிள்ளைகள், அறிவார்ந்த எனது ‘ஷோ’வை விரும்பிப் பாக்குறாங்க. ஆனா, அரசுப் பள்ளிகளில் எனது ’ஷோ’வை நடத்துறதுக்கு அனுமதி கேட்டால் அங்க, இங்கன்னு இழுத்தடிக்கிறாங்க. அனுமதி வாங்கி நடத்துற அளவுக்கு இது பெரிய நிகழ்ச்சி இல்லை. அப்படியிருந்தும் ஏன் இழுத்தடிக்கிறாங்கன்னு தெரியல” என்று வேதனைப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x