

ஓசூர்: அஞ்செட்டி பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுவதாக மலைக்கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்தது. இதனால் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து வியாபாரிகள் தக்காளியை விலைக்கு வாங்கி வந்து ஓசூர் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
உள்ளூரைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகள் ஓசூரில் இருந்து தக்காளியை வாங்கி வந்து அஞ்செட்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைக்கிராமங்களில் விற்பனை செய்கின்றனர்.
இப்பகுதியில் மற்ற பகுதிகளைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். 3-ம் தர மற்றும் 2-ம் தர தக்காளி கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, மலைக்கிராமங்களில் மானாவாரி முறையிலான பயிர்களை மட்டுமே பயிரிடுகிறோம். தக்காளி போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதில்லை. சில்லறை கடைகளில் இருந்து வாங்கி, சமையலுக்கு பயன்படுத்தி வந்தோம்.
இந்நிலையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால். வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
எங்களால் வாங்க முடியாத நிலை உள்ளது. மலைக்கிராம பகுதிகளில் வேளாண்மை துறை சார்பில் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு தக்காளி வழங்க வேண்டும், என்றனர்.