Published : 04 Aug 2023 06:05 AM
Last Updated : 04 Aug 2023 06:05 AM
ஆவடி: தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும் என பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில்நேற்று ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் சிறுதானிய உணவு பேரணி, பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றன.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இந்நிகழ்வுகளில் பங்கேற்றார்.சி.டி.எச். சாலையில், பட்டாபிராம் காவல் நிலையம் முதல், இந்துக் கல்லூரி வரை சுமார் ஒரு கி.மீ. தூரம் நடைபெற்ற சிறுதானிய உணவு பேரணியில், கல்லூரி மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
பிறகு, அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: சிறுதானியங்கள் நிறைந்த உணவை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
ஆகவே, தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் ஆவடி எம்எல்ஏ சா.மு. நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட உணவு பாதுகாப்பு, மருந்துநிர்வாகத் துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், மேயர் உதயகுமார், ஆணையர் தர்ப்பகராஜ் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT