Published : 04 Aug 2023 06:15 AM
Last Updated : 04 Aug 2023 06:15 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு விரைவு ரயில் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது.

இந்த ரயிலில் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஒரு பெண் மற்றும் இளைஞர் படிக்கட்டி அருகில் நின்று பேசியபடி பயணம் செய்தபோது, திடீரென அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அந்த இளைஞரும் கீழே விழுந்து தொங்கினார். அப்போது, நடைமேடையில் இருந்த பயணி ஒருவர், அந்த இளைஞரை பிடித்து இழுத்து காப்பாற்றினார்.

இதற்கிடையில், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய அந்த பெண்ணை பயணிகள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணைநடத்தினர். விபத்தில் சிக்கியது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த காருண்யா (24). இவர்செங்கல்பட்டில் உள்ள ஒருதனியார் நிறுவன ஊழியர். இவருடன் சேர்ந்து விபத்தில் சிக்கிய மற்றொருவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் (28) என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் காருண்யாவுக்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நண்பர் ராஜேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட காருண்யா மற்றும் அவரது நண்பர்கள், திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர். விபத்தில் சிக்கிய காருண்யாரயிலில் படிக்கட்டில் நின்றுகொண்டு ராஜேஷூடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய இளம்பெண்ணை உடனடியாக மீட்ட பயணிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x