Published : 04 Aug 2023 06:35 AM
Last Updated : 04 Aug 2023 06:35 AM
சென்னை: கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.49 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது எனகால்நடை நலக்கல்வி மைய இயக்குநர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரி கால்நடைமருத்துவ கல்லுாரி வளாகத்தில்பெண் தொழில் முனைவோருக்கான சந்திப்பு, ‘தலைவிகள்‘ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வக்குமார், தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் கால்நடை நலக்கல்வி இயக்குநர் சவுந்தரராஜன் உள்பட ஆராய்ச்சியாளர்கள், 170-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
அப்போது, கால்நடை மருத்துவ அறிவியல் கல்வியில், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், மத்திய, மாநில அரசு நிதியுதவிக்கான வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, ‘தலைவிகள்; உலகெங்கிலும் உள்ள வெற்றி பெற்ற பெண் தொழில்முனைவோரை வழிகாட்டியாக கொண்டு ஊக்கம் பெறல்’ அடிப்படையாக கொண்டுதயாரிக்கப்பட்ட விழா மலரை துணைவேந்தர் கே.என்.செல்வக்குமார் வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மகளிர் தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானது. முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 10 சதவீதம் பேராவது தொழில்முனைவோர்களாக மாற வேண்டும் என்றார். இதையடுத்து, தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் கால்நடை நலக்கல்வி இயக்குநர் சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலையில், தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பில் விலங்கியல்சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்வோர் இணையலாம். அவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சிகளை, பல்கலைக்கழக ஆய்வகத்திலேயே மேற்கொள்ளலாம்.
அத்துடன், நிதி ஆதாரங்களும் வழங்கப்படுகின்றன. சில கண்டுபிடிப்புகளுக்கு அதிக தொகை செலவாகும்பட்சத்தில், மாநில அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நிதியுதவி அளிக்கிறது. அதேபோல, மத்தியஅரசும் ரூ.49 லட்சம் வரை நிதியுதவி அளிக்கிறது.
எனவே, கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள் கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் வழிகாட்டுதல்கள் வழங்குவதுடன், நிதியுதவிக்கும் உதவுகிறோம். இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT