

கடலூர்: சேத்தியாதோப்பு சுற்று வட்டாரப் பகுதியில் என்எல்சியால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பயிர்களுக் கான இழப்பீட்டுத் தொகையை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்று என்எல்சி இந்தியா நிறுவனம் தெரி வித்துள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியைச் சுற்றியுள்ள கரி வெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் கைய கப்படுத்தப்பட்டன. அதற்கான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுரங்க விரிவாக்கப் பணி கள் நடைபெறாமல் நிலங்கள் அப்படியே இருந்த நிலையில், விவசாயிகள் அதில் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, என்எல்சி நிறுவனம், சுரங்க நீரை எடுத்துச் செல்லும்வகையில் பரவனாறு நிரந்தர மாற்றுப்பாதை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட இந்த விளை நிலங்களில் தனது பணியை தொடங் கியது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாமக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். இதை வரும் 6-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக வழங்கிட வேண்டும் என்று என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு உத்தர விட்டிருந்தது.
இதற்கிடையே, என்எல்சி இந்தியா நிறுவனம் நேற்று மாலை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், “என்எல்சி இந்தியா நிறுவனத்தால், ஏற்கெனவே, ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் என்கிற அளவில், காசோலைகள் கடந்த 29-ம் தேதி அன்று, நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாகவே, சிறப்பு துணை ஆட்சியரிடம் (நிலம் கையகப்படுத்துதல்) ஒப்ப டைக்கப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, மீதமுள்ள தொகைக்கான காசோலைகள், ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம், ஆக மொத்தம் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் என்கிற அளவில், பயிர்கள் இழப்பீட்டுத் தொகையாக, சிறப்பு துணை ஆட்சியரிடம் (நிலம்கையகப்படுத்துதல்) ஒப்படைக்கப் பட்டுள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை, சிறப்பு துணை ஆட்சியரை (நிலம் கையகப்படுத்துதல்) தொடர்பு கொண்டு இன்று (ஆக.4)காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித் துள்ளது.