

திருப்பத்தூர்: சீமான் அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூரில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தென்மாப்பட்டு பகுதியில் தொடங்கி நான்கு ரோடு, காந்தி சிலை வழியாக அண்ணாசிலையை அடைந்தார்.
பின்னர் அவர் கூறியாதவது: திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல தொழில் நிறுவனங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.
சீமான் அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகிறார். மணிப்பூர், பஞ்சாப்பில் இந்துக்கள் சிறுபான்மையினர். தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினர்.
சிறுபான்மையினர் என்றால் யாரும் குறைந்தவர்கள் இல்லை. பெரும்பான்மையினர் என்றால் உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சமமானவர்கள்தான். சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பிடம் உள்ளது. அதை நீக்கிவிட முடியுமா? அனைவரும் ஒன்று என்றால் பல சலுகைகள் இல்லாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மோடிக்கு தெரிந்த பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘சிலர் அரசியல் விஞ்ஞானியாக நினைத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள்’ என்று கூறினார்.