Published : 07 Nov 2017 11:31 AM
Last Updated : 07 Nov 2017 11:31 AM

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன்

கந்து வட்டி கொடுமையால் திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி, கேலிச்சித்திரம் வரைந்ததாக கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, தனது மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா மீது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 501 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் பாலா மீது, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட பாலா, திருநெல்வேலிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இரு நபர் ஜாமீனில் பாலாவை விடுவிக்க, நீதித்துறை நடுவர் ராமதாஸ் உத்தரவிட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஒரு குடும்பமே பலியாகிவிட்டது. எனக்குள் ஏற்பட்ட அந்த வலியைத்தான் கேலிச்சித்திரமாக வெளிப்படுத்தியிருந்தேன். எனக்கும், ஆட்சியருக்கும் எவ்வித தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. எனது கேலிச்சித்திரத்தால் அவரது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்கள் வரைவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x