Published : 04 Aug 2023 06:45 AM
Last Updated : 04 Aug 2023 06:45 AM

திருப்பத்தூர் ரேஷன் கடைகளில் ரூ.110-க்கு தக்காளி வாங்கி ரூ.60-க்கு விற்பனை

திருப்பத்தூர் நியாய விலை கடைகளில், தக்காளி விற்பனையை தொடங்கி வைத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. விவசாயிகளிடம் ரூ.110-க்கு தக்காளியை வாங்கி அதை ரூ.60-க்கு விற்பனை செய்து வருவதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் தக்காளி விலை தினசரி உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.130 முதல் ரூ.150 வரைவிற்பனை செய்யப்படுகிறது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி ஆகிய உழவர் சந்தைகளில் ரூ.100 முதல் ரூ.110 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நகராட்சி பகுதிகளிலும் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது.

திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கி வைத்தார். 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் உள்ள 5 கூட்டுறவு நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தக்காளியை வாங்கிச்சென்றனர்.

ஒரு கிலோ தக்காளியை ரூ.110-க்கு கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அதை நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூட்டுறவு நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

இது குறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘அரசின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 5 இடங்களில் நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனையை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு கடையிலும் ஒரு நாளைக்கு 50 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்தில் விற்பனை முடிந்து விடுகிறது. போதுமான தக்காளி எங்களுக்கு கிடைக்கவில்லை. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். நேற்று முன்தினம் ரூ110-க்கு வாங்கினோம், இன்று (நேற்று) ரூ.100-க்கு வாங்கியுள்ளோம். இன்னும் விலை குறைவாக வாங்க வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் பேசி வருகிறோம்.

ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படும். 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்க வேண்டும் என நியாய விலை கடை விற்பனையாளர் களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தக்காளி விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x