

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் எம்.திருநாவுக்கரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பி.வி.எஸ்சி., பி.டெக். (உணவு தொழில்நுட்பம்), பி.டெக். (கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் சேர 18,698 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 18,078 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அவர்களின் தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tanuvas.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
கவுன்சலிங் எப்போது?
கல்லூரியை தேர்வுசெய் வதற்கான கவுன்சலிங் ஜூலை 30-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ல் முடிவடையும். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கவுன்சலிங் நடைபெறும்.
பி.வி.எஸ்சி படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 30, 31-ம் தேதிகளிலும், இரு பி.டெக். படிப்புகளுக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 1-ம் தேதியும் நடத்தப்படும். இதற்கான அழைப்புக்கடிதம் ஜூலை 3-வது வாரத்தில் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.