

சோழ மன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா மற்றும் அவரது ஆடி திருவாதிரை பிறந்த நாள் விழா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
முதல் நாளான வியாழக்கிழமை கங்கை கொண்ட சோழபுரம் குருவாலப்பர் கோயிலில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை செம்மொழி ஆய்வு மைய நிறுவன பொறுப்பு அலுவலராக பணியாற்றிய அ.ராமசாமி தலைமை வகித்தார். விழா ஒருங்கிணைப்பாளரான இரா.கோமகன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தின் தலைவர் (இந்தியவியல்) எ.சுப்பராயலு பேசினார்.
நூல்கள் வெளியீடு…
தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் ஆ.சந்திரமூர்த்தி, கண்ணியம் திங்களிதழ் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் எழுதிய மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-மாவது ஆண்டு விழா சிறப்பு வெளியீடான ‘கங்கை கொண்ட சோழ புரம்’ நூலை தொல்லியல் துறை முன்னாள்துணை இயக்குநர் கி.ஸ்ரீதரன் வெளியிட்டார். முதல் பிரதியை அ.ராமசாமி பெற்றுக்கொண்டார்.
தொல்லியல் அலுவலராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘கரந்தை செப்பேடுகள்’ நூலை அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சா.சிற்றரசு வெளியிட, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் கு.அரசேந்திரன் பெற்றுக்கொண்டார். மோகன் எழுதிய ‘கங்கை கொண்டான் காதலி’ என்ற வரலாற்று புதினமும் வெளியிடப்பட்டது.
ராசேந்திரன் போற்றுதும்…
ஸ்ரீதரன், சந்திரமூர்த்தி, சாந்தலிங்கம், ராஜாமுகமது, குடவாயில் பாலசுப்பிர மணியம், ராஜவேலு, ராஜசேகர தங்கமணி ஆகியோரை தலைமையாக கொண்ட அமர்வுகளில் 72 ஆராய்ச்சிக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. விழாவில் இந்த கட்டுரைகளின் நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது. அரியலூர் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வர் இல.தியாகராஜன் மற்றும் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.
கருத்தரங்கில் ராசேந்திர சோழனின் சமய, பொருளாதார, கட்டிடக்கலை, சிற்பம், அரசியல், போர் வியூகங்கள் மட்டுமில்லாது அவரது காதலும் அலசப்பட்டது. இதில் தமிழனின் மணிமுடி அண்டை நாட்டில் அடகு இருப்பதா..? என்று இலங்கையை ராசேந்திரன் துவம்சம் செய்து மீட்டு வந்த பாண்டியன் அரச உடமைகள் மற்றும் அதையொட்டிய வரலாற்று பெருமைகள்…
சோழர் காலத்திய நில அளவை முறைகள், நீர் மேலாண்மை, பாசன செழிப்பு, ராசேந்திரன் வெளியிட்ட காசுகள் அவை சொல்லும் கதைகள்… என கருத்தரங்க அமர்வுகளில் நெஞ்சை நிமிர வைக்கும் உருக வைக்கும் வரலாற்று தரவுகளை வரிசைப்படுத்தி ராசேந்திர சோழனின் பெருமையை அறிஞர்கள் போற்றினர்.
தொடர்ந்து மாலையில் இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை ஆடி திருவாதிரை சிறப்பு நிகழ்வுகளாக தஞ்சையிலிருந்து தொடர் தீபச் சுடரோட்டம், பிரகதீஸ்வரருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அறிஞர்களுக்கு பாராட்டு விழா, வரலாற்று உரை ஆகியவை நடைபெற உள்ளன. இதில் எழுத்தாளர் பாலகுமாரன், திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.