Published : 29 Nov 2017 04:59 PM
Last Updated : 29 Nov 2017 04:59 PM

அசோக்குமார் தற்கொலை வழக்கு: அன்புச்செழியன் அலுவலக நிர்வாகிகள் 2 பேர் கைது: கந்துவட்டி சட்டத்திலும் வழக்குப் பதிவு

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அன்புச்செழியனை போலீஸார் தேடி வரும் நிலையில் அவரது நிறுவனத்தை சேர்ந்த முக்கியமான நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அசோக்குமாரை மிரட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதலாக கந்துவட்டி சட்டத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர், நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்த அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அவரது தற்கொலைக்கு முன், தனது மரணத்திற்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன்தான் அவரிடம் பைனான்ஸ் வாங்கியதால் தானும் சசிகுமாரும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வந்தோம். மிரட்டல் மற்றும் அவமானம் காரணமாக அவமானத்தால் இந்த முடிவை மேற்கொள்கிறேன் என்று எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

அசோக்குமாரின் மரணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 2003-ல் ஜிவி தற்கொலையில் இவரது பெயர் அடிபட்டு ஏன் நடவடிக்கை இல்லை என்றும், அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பேட்டி அளித்தனர்.

அன்புச்செழியன் மீது 306 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். அவரைப் பிடிக்க தனிப்படைகள் தென் மாவட்டங்கள் மற்றும் ஹைதராபாத்துக்கு விரைந்துள்ளது. இந்நிலையில் அன்புச்செழியன் நிறுவனத்தில் பணீயாற்றும் அன்புச்செழியனின் நண்பர் அசோக்நகர் ராகவையா குடியிருப்பில் வசிக்கும் முருககுமார் (எ) முருக சுந்தரம்(50), வளசரவாக்கம் காரைக்குடி அம்மையார் தெருவில் வசிக்கும் சாதிக்பாஷா(49). சாதிக் பாஷா அன்புச்செழியன் அலுவலக மேலாளராக பணியாற்றி வருகிறார். இருவரையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அன்புச்செழியன் அலுவலகத்தில் தாங்கள் இருவரும் பணியாற்றுவதாகவும் இறந்த அசோக்குமார் மற்றும் நடிகர் சசிகுமாரை அன்புச்செழியன் கொடுத்த கடனை கேட்டு மிரட்டியதாக ஒத்துக்கொண்டதாக தெரிவித்துள்ள போலீஸார் இருவர் மீதும் பிரிவு 306( தற்கொலைக்கு தூண்டுதல்) கந்துவட்டி தடைச்சட்டம் 3&4 of (exorbident interest Act) கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் அன்புச்செழியன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் தெரிந்து அங்கு செல்ல உள்ளனர். அன்புச்செழியனை விரைவில் கைது செய்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் கூறிவருகின்றனர்.

இதனிடையே முன் ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்கு முன்னர் அன்புச்செழியனை கைது செய்ய போலீஸார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x