Published : 16 Nov 2017 08:59 AM
Last Updated : 16 Nov 2017 08:59 AM

வருமானவரித் துறை அலுவலகத்தில் இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளரிடம் விசாரணை: வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளர் நடராஜன் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து, அதில் தொடர்புடையவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அதிமுக(அம்மா) கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் கடந்த 13-ம் தேதியும், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் 3 பேர், ‘சுரானா’ நிறுவனத்தின் நிர்வாகிகள் மித்தேஷ், சாந்திலால் ஆகியோர் நேற்று முன்தினமும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

கிருஷ்ணபிரியா

இளவரசியின் மகள்களான கிருஷ்ணபிரியா, அவரது தங்கை ஷகிலா ஆகியோரின் வீடுகளிலும் 5 நாட்களாக சோதனை நடத்தப்பட்டு, நேற்று விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். விசாரணை முடிந்து வெளியே வந்த கிருஷ்ணபிரியா, “வருமான வரித்துறையின் சோதனை வழக்கமான ஒரு நடவடிக்கைதான். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனது வீட்டில் சோதனை நடத்தி, எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை” என்றார்.

அதைத் தொடாந்து ஜெயா டிவி மேலாளர் நடராஜன் ஆஜரானார். அவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் அனைவரின் வாக்குமூலங்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x