Published : 14 Nov 2017 08:20 AM
Last Updated : 14 Nov 2017 08:20 AM

அமெரிக்காவில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம்: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் தகவல்

அமெரிக்காவில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர இந்திய மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் இந்த ஆண்டு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய வருடாந்திர அறிக்கையை அமெரிக்க துணை தூதரகத்தில் நேற்று அவர் வெளியிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் ராபர்ட் கூறியதாவது: இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 267 மாணவ - மாணவிகள் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 12.3 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 16 ஆண்டுகளில், மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் செல்கிறார்கள். உலகத்தரமான கல்வி, பன்முகச்சூழல் போன்றவை இதற்கு காரணங்கள் ஆகும்.

இந்திய மாணவர்கள் பெரும்பாலும் இளங்கலை படிப்புகள் படிக்கவே அமெரிக்கா செல்கிறார்கள். மேலும் பிஎச்டி படிப்பு படிக்கவும் கணிசமானோர் அமெரிக்கா போகிறார்கள் என்றார்.

சென்னையில் உள்ள இந்திய அமெரிக்க கல்வி அறக்கட்டளையின் ஆலோசகர் மாயா சுந்தரராஜன் கூறும்போது, “மேற்படிப்புக்கு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளை படிக்க விரும்புகிறார்கள். இந்தியாவில் சென்னை உள்பட 7 முக்கிய நகரங்களில் இந்திய அமெரிக்க கல்வி அறக்கட்டளையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த அறக்கட்டளை அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x