Published : 27 Nov 2017 04:48 PM
Last Updated : 27 Nov 2017 04:48 PM

ரகுவைக் கொன்றது யார்?- கோவைவாசிகளின் கொந்தளிப்பு கோட்டைக்கு கேட்குமா?

ரகுபதி சுருக்கமாக ரகு. அந்த 32 வயது துடிப்பான இளைஞரை ரகு என்றுதான் அப்பா கந்தசாமியும் குடும்பத்தினரும் அழைத்துவந்தனர்.  கோவை சின்னியம்பாளையத்தில் இருக்கிறது ரகுவின் வீடு.

திருமண ஏற்பாடுகளில் கலகலப்பும் மகிழ்ச்சியும் ததும்பியிருக்க வேண்டிய அந்த வீடு. அழுகை கூக்குரல்களால் இருண்டு போயிருக்கிறது. மயான அமைதியின் பிடியில் சோகத்தின் மொத்த உருவமாக வெறும் கல்லும் மண்ணுமாக நிற்கிறது ரகுவின் வீடு.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரகுபதி, அண்மையில்தான் கோவை வந்தார். எதற்காகத் தெரியுமா? திருமணத்துக்கு பெண் தேடுவதற்காக. எத்தனை கனவுகளுடன் அந்த இளைஞர் வந்திருக்க வேண்டும்? எத்தனை எத்தனை ஆசைகளோடு அவரது பெற்றோர் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், என்ன நடந்திருக்கிறது? ரகு அகால மரணமடைந்துவிட்டார். இதற்கு யார் காரணம் என்பதுதான் இப்போது தமிழக மக்களும் எழுப்பும் கேள்வி.

மரணம் கவ்விய அந்த சில மணித்துளிகள்..

கடந்த சனிக்கிழமை (25.11.2017) அதிகாலை ரகு வீட்டில் இருந்து பழனிக்கு கிளம்பியபோது, வீட்டில் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் அதுவே ரகுவின் கடைசிப்பயணமாக இருக்கும் என்று.

திருமணம் தொடர்பாக பழனியில் சிலரை பார்ப்பதற்காக ரகு, சின்னியம்பாளையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2:00 மணியளிவில் இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் பழனி செல்ல திட்டமிட்டார்.

அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே எம்ஜிஆர் நூறாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சாலையை மறைக்கும் அளவுக்கு நின்றிருந்தது. சாலைகளை ஆக்கிரமித்து சவுக்கு கட்டைகளை சாலைகளில் நட்டு வைக்கப்பட்ட அலங்கார வளைவுகளால் அந்த சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. ஏற்கெனவே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரும் இங்கே இப்படி ஆபத்தான வளைவு தேவைதானா? என்று புலம்பியபடிதான் சென்றிருக்கின்றனர்.

அதே வழியாக இருசக்கர வாகனத்தல் வந்த ரகு, அந்த அலங்கார வளைவில் மோதி கீழே விழுந்திருக்கிறார். அப்போது டிப்பர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. இதில் பலத்த காயமடைந்த ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுமந்து சென்ற கல்யாணக் கனவுகள் எல்லாம் ரத்தமாக சாலையில் வழிந்தோட, ரகுவின் உயிர் பிரிந்த அந்த தருணத்தில் தார் சாலைகூட கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.

அப்படி என்றால், தங்கள் பிள்ளையை பலி கொடுத்த கோவை மக்களுக்கு கண்ணீர் வராதா என்ன? அந்தக் கண்ணீரால் எழுப்பட்ட கேள்விதான் சாலையில் எழுதப்பட்ட 'WHO KILLED RAGU?'

ரகுவின் அகால மரணத்தை அவ்வளவு சாதாரணமாக நாம் கடந்துபோய்விட முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேட்கலாம் இதுவும் ஒரு சாலை விபத்துதானே என்று.

சாலை விபத்து யாரால் ஏற்பட்டது? எதனால் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.

மாறாக, தவறான பாதையில் வந்த டிப்பர் லாரிதான் காரணம் என்று அவசரமாக அறிக்கை விடுகிறது காவல்துறை. லாரி நிறுவனத்துக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருக்கிறது அதனாலேயே பிரச்சினையை திமுக திசை திருப்புகிறது என அரசியல் பேசுகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோட்டைக்கு கேட்குமா ?

அரசு நிர்வாகமும்,காவல்துறையும், அரசியல்வாதிகளும் ஆளுக்கு ஒரு காரணத்தை ரகுவில் மரணத்தில் சொன்னாலும் கோவை மக்கள் கேட்கும் கேள்வி ஒன்று தான் . "ஆட்சியாளர்களே.. நீங்கள் தாராளமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுங்கள். உங்கள்

கொண்டாட்டங்களுக்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். ஆனால், நீங்கள் அனுமதியே பெறாமல் உங்கள் பகட்டுக்காக சாலையை ஆக்கிரமித்து வைத்த அலங்கார வளைவு ஓர் இளைஞரின் உயிரை அல்லவா காவு வாங்கியிருக்கிறது? மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி நடத்தலாம்.. ஆனால், மக்கள் ரத்தத்தில் விழா நடத்தலாமா?" என்பதே அந்த வேதனை ததும்பும் கேள்வி.

இது குறித்து கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் (Coimbatore Consumer Cause) தொண்டு அமைப்பின் நிறுவனர் கதிர்மதியோன் கூறும்போது, "சாலை என்பது போக்குவரத்துக்காக மட்டுமே. அதில் கட்அவுட், பேனர், கொடிகள், அலங்கார வளைவுகள் வைப்பதை ஏற்க முடியாது. இதை நாங்கள் பலமுறை வலியுறுத்தியிருக்கோம். கோவையில் ரகு என்ற இளைஞர் சாலை விபத்தில் இறந்தாரா அல்லது அலங்கார வளைவில் மோதியதில் இறந்தாரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அந்த அலங்கார வளைவு சாலையின் 35 சதவீதத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இரவு நேரத்தில் இந்த வளைவு இருப்பது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே, ரகுவின் மரணத்தையும் சுட்டிக்காட்டி தலைமைச் செயலருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளேன். அதில், சாலைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் கட்அவுட், பேனர், கொடிகள், அலங்கார வளைவுகள் என எதுவும் வைக்காத அளவில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஒரு அரசாணை பிறப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். ஒருவேளை எங்கள் வலியுறுத்தல் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யவுள்ளோம்.

மாவட்ட சாலைகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே நிர்வாக இயக்குநர் என்பதால் சாலை பாதுகாப்பும் அவரது பொறுப்பின் கீழ்தான் வருகிறது. எனவே, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறிய கட்சி என எந்த பேதமும் பார்க்காமல் கட்அவுட், பேனர், கொடிகள், அலங்கார வளைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க வேண்டும். தவறைத் தட்டிக்கேட்காமல் இருப்பது தவறுக்கு உடந்தையாக செயல்படுவதே. எனவே, யாருக்கும் அனுமதி அளிக்காமல் இருப்பதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். அதேபோல், இத்தகைய இடையூறுகளால் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாகும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்" என்றார்.

சமூக ஆர்வலர்களின் இந்த உரிமைக்குரலும் கோவை மக்களின் இந்த ஆதங்கக் குரல் கோட்டைக்கு கேட்குமா? மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் அரசு, அரசியல் விழாக்களை ஆட்சியாளர்கள் கொண்டாடுவார்களா?! சாலையைத் தடுத்து பேனர் வைப்பது, அலங்கார வளைவு வைப்பது இதற்கெல்லாம் அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் கவனத்துடன் செயல்படுவார்களா? இப்படி பல கேள்விகள் கோவை மக்களைக் கடந்து சமுக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கின்றது.

மக்களை காக்க வேண்டிய கடமை அரசுக்கு நிச்சயம் இருக்கிறது. கடமை தவறாமல் , உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க அரசு இயந்திரம் இனியாவது விழித்து கொள்ள வேண்டும். ரகு போன்ற இளைஞர்களின் உயிர்பலி இனியும் வேண்டாமே….

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x