

சென்னையில் கனமழை பெய்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வருகை குறைந்து கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விற்பனை மந்தமாகவே இருந்தது. அதனால் அங்கு காய்கறிகள் விலை குறைந்துள்ளன.
சென்னையில் ஆண்டு சராசரி மழையளவு 120 செமீ. தென்மேற்கு பருவமழையின்போது 40 செமீ, வடகிழக்கு பருவமழையின்போது 80 செமீ என்ற அளவில் பெய்யும். ஆனால் சென்னையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை மட்டுமே சராசரியாக 43 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன்
காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக் காடாயின. பல சாலைகளில் போக்குவரத்து முடங்கின. மற்ற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மின்கசிவு ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
பொதுமக்கள் யாரும் வெளியில் வராததால், சில்லறை காய்கறி விற்பனை கடைகள் மற்றும் தெருவோர காய்கறி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது.
அதனால் அவர்களும், கடந்த 4 நாட்களாக கடைகளை திறக்கவில்லை. கோயம்பேடுக்கு சென்றும் காய்கறிகளை வாங்கவில்லை. பொதுமக்களும் கோயம்பேடு சந்தைக்கு செல்ல முடியவில்லை. அதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக விற்பனை மந்தமாக இருந்தது. அதனால் அங்கு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர் பி.சுகுமார் கூறியதாவது: கனமழை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு மக்கள் வரத்து இல்லை. சில்லறை வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். அதனால் காய்கறி விற்பனை மந்தமாகவே இருக்கிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்தது. அதனால் காய்கறிகள் எதுவும் வீணாகி கீழே கொட்டும் நிலை ஏற்படவில்லை. இருக்கும் காய்கறிகள் விலை குறைத்து விற்கப்பட்டன. தற்போது மழை விட்டு, சூரிய வெளிச்சம் பிறந்துள்ளதால், வியாபாரம் சற்று சூடு பிடித்துள்ளது என்றார்.
நேற்றைய நிலவரப்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் (கடந்த வார விலை அடைப்புக்குறிக்குள்) தக்காளி கிலோ ரூ.30 (ரூ.50), வெங்காயம் ரூ.30 (ரூ.36), சாம்பார் வெங்காயம் ரூ.110 (ரூ.110), கத்தரிக்காய் ரூ.30 (ரூ.35), உருளைக்கிழங்கு ரூ.15 (ரூ.16), அவரைக்காய் ரூ.50 (ரூ.70), வெண்டைக்காய் ரூ.16 (ரூ.18), முள்ளங்கி ரூ.25 (ரூ.40), பாகற்காய் ரூ.20 (ரூ.20), பீன்ஸ் ரூ.45 (ரூ.60), முட்டைக்கோஸ் ரூ.25 (ரூ.28), கேரட் ரூ.55 (ரூ.55), பீட்ரூட் ரூ.35 (ரூ.35), புடலங்காய் ரூ.15 (ரூ.15), முருங்கைக்காய் ரூ.60 (ரூ.70), பச்சை மிளகாய் ரூ.28 (ரூ.28) என விற்கப்பட்டது.
மழை விட்டு, மக்கள் வெளியில் வரத் தொடங்கியதால், சில்லறை விற்பனை கடைகளான ஜாம்பஜார், மயிலாப்பூர் சந்தை, வியாசர்பாடி சந்தை, பெரம்பூர் சந்தை உள்ளிட்டவற்றில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தெருவோரக் கடைகளும் திறக்கப்பட்டு இருந்ததால், அங்கும் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.