Last Updated : 14 Nov, 2017 12:44 PM

 

Published : 14 Nov 2017 12:44 PM
Last Updated : 14 Nov 2017 12:44 PM

மத்திய அரசு நடவடிக்கையில்லை; நீதிமன்றத்தை அணுக முடிவு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி பிரச்சினைகளுக்காக மத்திய அரசை அணுகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தாள் விழா புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நேருவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதையை செலுத்தியும், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பிறந்தநாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் மற்றும் ஜிஎஸ்டியால் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 20 முறை மத்திய அரசை அணுகி புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி கேட்டும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மத்திய அரசு முடக்க நினைக்கிறது.

அத்துடன் எதிர்க்கட்சிகளை சிபிஐ மற்றும் வருமானவரித்துறை மூலம் முடக்க, மத்திய பாஜக அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ராகுல்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளுக்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கதவுகளைத் தட்டிவிட்டோம் எதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, அடுத்து நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x