

சென்னை: தென்மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆக.17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறும் எனதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திமுகவில் 2 கோடி உறுப்பி னர்களை வெற்றிகரமாகச் சேர்த்து,ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் அறிவுரைப்படி, சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டம்’ நடத்த முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26-ம் தேதி, திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தென்மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ஆகஸ்ட்17-ம் தேதி ராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூரில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தென்மண்டலத்துக்கு உட்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு,திருநெல்வேலி கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு ஆகிய 19 கழக மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்கள் தத்தமது மாவட்டங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்கள்அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள ஏற் பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.