

தருமபுரி: கடந்த ஆண்டில் 22 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், நடப்பு ஆண்டில் இது 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்று சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:
அரசின் தமிழ்நாடு ஓட்டல்களின் உணவகங்களில் கிடைக்கும் உணவு வகைகளின் சுவை மற்றும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் பிரபல சமையல் நிபுணர்கள் மூலம் தமிழ்நாடு ஓட்டல் சமையல் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு ஓட்டல்களின் அறைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மிகத் தூய்மையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 22 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இது 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஒகேனக்கல்லுக்கு கடந்தாண்டில் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதை 2 கோடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை போலவே தருமபுரி மாவட்டத்திலும் யானைகள் காப்பகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒகேனக்கல்லில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுலாத் தல மேம்பாட்டுப் பணிகள் டிசம்பருக்குள் முடியும். தருமபுரி அடுத்த வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, தருமபுரி கோட்டாட்சியர் கீதாராணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.