Published : 03 Aug 2023 04:27 AM
Last Updated : 03 Aug 2023 04:27 AM
சென்னை/புதுச்சேரி: மனித வள மேம்பாட்டு மைய நிதியில் முறைகேடு செய்ததாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஹரன் ஆகியோருக்கு எதிரான புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட மனித வள மேம்பாட்டு மையத்தில் கடந்த 2008 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அதன் இயக்குநராக பேராசிரியர் ஹரிஹரன் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது மத்திய அரசிடமிருந்து மனித வள மேம்பாட்டு மையத்துக்காக பெறப்பட்ட ரூ. 5 கோடிக்கான நிதிக்கு போலியாக ரசீதுகள் தயாரித்து ரூ. 2.25 கோடி வரை நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஹரிஹரன் மீதும், இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக துணைவேந்தர் குர்மீத் சிங் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தனக்கு எதிரான இந்த நிதிமுறைகேடு குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக பேராசிரியர் ஹரிஹரன், பல்கலைக்கழக துணைவேந்தரான குர்மீத் சிங்குக்கு ரூ. 50 லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்’ என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன் ஆஜராகி, ‘ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி பெறப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிய அனுமதிகோரி, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியருக்கு எதிரான இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என மறுத்து மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமும் கடிதம் அனுப்பியுள்ளது என்றார்.
பின்னர் நீதிபதி, இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் மனுதாரர் கடந்தாண்டு பிப்.4-ல் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொய்யான ஊழல் புகார்களில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலமாக ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே மனுதாரர் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியருக்கு எதிராக அளித்துள்ள புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், என சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT