Published : 03 Aug 2023 06:42 AM
Last Updated : 03 Aug 2023 06:42 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.442 கோடியில் 4,750 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் மற்றும் 5 ஆயிரத்து 270 கிமீ நீளமுடைய 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தரமான சாலைகளாகப் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
6 மண்டலங்கள்: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டில் திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.55.61 கோடியில் 414 உட்புற சாலைகள் மற்றும் 38 பேருந்து தடச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தில் அனைத்து மண்டலங்களிலும் ரூ.149 கோடியில் 1,335 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
சாலை உட்கட்டமைப்பு திட்டம்: நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 1-ல் ரூ.162.69 கோடியில் மொத்தம் 222.59 கிமீ நீளமுடைய 1,408 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. திட்டம் 2-ல் ரூ.97.49 கோடியில் 147.84 கிமீ நீளத்துக்கு 917 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.298.04 கோடியில் 517.7 கிமீ நீளமுடைய 3,298 சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தில் ரூ.144.71 கோடியில் 244.61 கிமீ நீளமுடைய 1,452 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.442.75 கோடியில் 763 கிமீ நீளத்துக்கு, 4,750 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT