

சென்னை: சென்னையில் உலர் விழி பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகள்ல் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா ராஜகோபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னையில் சுமார் 30 சதவீதத்தினருக்கு உலர் விழி (டிரை ஐஸ்) பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் உலர் விழி பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருந்தால் உலர் விழி பிரச்சினை ஏற்படுகிறது.
மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீர்தான். ஆனால், உலர் விழி பிரச்சினையுடையவர்களுக்கு சரியாக கண்ணீர் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும்தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்ணில் ஒளிவிலகல் குறைபாடு உடையவர்கள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன்), முடக்குவாத பாதிப்புள்ளவர்களுக்கு உலர் விழி பிரச்சினை வருவதற்கு வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பார்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பார்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடர்ந்து பார்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.