Published : 03 Aug 2023 06:09 AM
Last Updated : 03 Aug 2023 06:09 AM
சென்னை: உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக் கவசத்துக்கு பதிலாக காகித கப் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானதை அறிந்தவுடன் உரிய விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் அ.விஸ்வநாதன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 1-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடந்த ஜூலை 27 காலை புறநோயாளிகள் பிரிவில் 11 வயது மாணவர் வி.நேசனுக்கு லேசான இளைப்பு நோய் பிரச்சினை இருந்ததால், அவருடைய தந்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பணியிலிருந்த மருத்துவர் ஜானகிராமன் மாணவனை பரிசோதித்து நெபுலைசேஷன் சிகிச்சை அளிக்குமாறு செவிலியர் அருணாஜோதியிடம் தெரிவித்துள்ளார்.
மாணவனுக்கு நெபுலைசேஷன் சிகிச்சை அளிக்கும்போது, எனது மகனுக்கு வேறு நோயாளிக்கு வைத்த முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாணவனின் தந்தை கூறியுள்ளார்.
அதற்கு செவிலியர், முகக் கவசம் தண்ணீரில் கழுவப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. அதனால் முகக் கவசத்தை பயன்படுத்தலாமென தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் தான் வைத்திருந்த பேப்பர் கப்பை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க தெரிவித்துள்ளார். அவர் வற்புறுத்தல் காரணமாகவும், மற்ற நோயாளிகள் சிகிச்சைக்கு காத்திருந்ததாலும் செவிலியர் அவ்வாறு செய்துள்ளார்.
மருத்துவமனையில் பெரியவர்கள் முகக் கவசம்–5, சிறியவர்கள் முகக் கவசம்-4 என போதுமான அளவு கையிருப்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், காகித கப் பயன்படுத்தியது தவறானது. இந்த விசாரணையின் அடிப்படையில், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT