Published : 03 Aug 2023 06:47 AM
Last Updated : 03 Aug 2023 06:47 AM

திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் பிரசித்திப் பெற்ற திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது, பழமையான இக்கோயிலுக்கு, பூந்தமல்லியில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, 40 சென்ட் நிலம் அமைந்துள்ளது.

இந்த நிலத்தை 4 பேர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை கட்டி, ஆட்டோ ஒர்க்ஸ், டர்னிங் ஒர்க்ஸ் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டு வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் சட்டப்பிரிவுகள் 78 மற்றும் 79-ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, கோயில் நிலத்தை விட்டு வெளியேற ஆக்கிமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். முடிவுக்கு வந்த அவ்வழக்கு விசாரணையில், கடந்த ஏப். 25-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம், 3 மாதங்கள் கால அவகாசம் அளித்து, திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை திருவள்ளூர் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள ரூ.10 கோடி மதிப்பிலான 45 சென்ட் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் சிலவற்றுக்கு சீல் வைத்தும், சில ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியும் நிலத்தை மீட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x