Published : 03 Aug 2023 06:40 AM
Last Updated : 03 Aug 2023 06:40 AM
சென்னை: சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும், 119 அடி உயர கொடிக்கம்பம் ரூ.45 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகிறது. இப்பணி சில தினங்களில் முடிவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிமரத்தில் முதல்வர் கொடியேற்றுவார். ஆக. 15-ம்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இக் கொடிமரம் புதுப்பிக்கும் பணி ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. கொடிமர நடைமேடை மற்றும் பிணைக் கயிறுரூ.30 லட்சத்திலும், கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகிறது.
கொடிக் கம்பத்தின் முதல் அடுக்கு 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.இரண்டாம்அடுக்கு 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது. மூன்றாம் அடுக்கு 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கொடிக்கம்பத்தை ஆய்வு செய்தபோது துருப்பிடித்திருந்ததால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேனா நினைவுச் சின்னம்: கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் குறித்துஅமைச்சர் வேலுவிடம் கேட்டதற்கு, ‘‘பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக தொடங்கப்பட்டது. இச்சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட பணிதான் கடலில் பேனா நினைவுச் சின்னம்நிறுவுவது. இதற்கான திட்டமதிப்பீடு இன்னும் தயாரிக்கவில்லை. கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நினைவிடம் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT