Last Updated : 01 Nov, 2017 07:17 PM

 

Published : 01 Nov 2017 07:17 PM
Last Updated : 01 Nov 2017 07:17 PM

தொடரும் வாகனப் பதிவெண் விவகாரம்: ஆந்திர முதல்வர் கடிதம் எழுதியதாக கிரண்பேடி தகவல்

வாகனப் பதிவெண் விவகாரம் தொடரும் நிலையில் ஆந்திர முதல்வர் தனக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆம்னி பஸ்களின் பர்மிட் சான்றுகளை திரும்பப் பெறுமாறு குறிப்பிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் அமலாபால்,பகத் ஃபாசில், சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தொடங்கி பல அரசியல் கட்சியினர் புதுச்சேரியில் தங்கள் உயர் ரக கார்களை பதிவு செய்து எண்களைப் பெற்றுள்ளனர். இதற்கு காரணம் புதுச்சேரியில் ஒரு சத வரி வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் தங்கியிருப்பது போல் வாடகை வீடு எடுத்த ஆவணங்கள், எல்ஐசி சான்று அம்முகவரியில் எடுத்தது போன்று சமர்ப்பிக்கின்றனர். இதில் விதிமீறல்கள் இல்லை. வரி நிர்ணயத்தை அந்தந்த அரசே முடிவு எடுக்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதனால் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது தவறு என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக போக்குவரத்துத்துறை அலுவலகம் சென்று உயர் ரக கார்கள் பதிவு தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

இதுதொடர்பாக வாட்ஸ் அப்பில் கிரண்பேடி வெளியிட்ட தகவல்கள்:

புதுச்சேரி நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் வெளிமாநில விஐபி கார்களுக்கு குறைவான சாலை வரி விதிக்கலாமா? இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இதே முறைகேடு வெளிமாநிலத்தவர் வாங்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கும் நடைபெறுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டையின் அடிப்படையில் இந்த முறைகேடுகள் செய்யப்பட்டாலும், சுத்தமான நிர்வாகம் தேவை.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் இருந்து ஆம்னி பஸ்கள் பர்மிட் தரப்படுவதால் வருவாய் இழப்பு தங்கள் மாநிலத்துக்கு ஏற்படுகிறது. மேலும் இதுதொடர்பான சான்றுகளை திரும்பப் பெற வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு விஷயத்தில் மத்திய அரசின் தணிக்கைத்துறை விசேஷமான ஆய்வை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். முகவர்கள் தற்காலிக முகவரிகளை பாலிசி பெறுவதற்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை எல்ஐசி நிறுவனம் தெரிவிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் எல்ஐசி முகவர்களும், வாகன விற்பனை டீலர்களும் இணைந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எந்தெந்த நோட்டரி வழக்கறிஞர்கள் இந்த முகவரியைக் கொண்டு சான்று வழங்கியுள்ளனர் என்பதையும் கண்டறிய வேண்டும். சட்டத்துறை மூலம் பதிவு பெற்றுள்ள 80 நோட்டரி வழக்கறிஞர்களிடமும் சட்டத்துறை விசாரணை நடத்த வேண்டும்.

எல்ஐசி பாலிசி வழங்க தற்காலிக முகவரி வழங்க முதல் காரணமாக இருப்பவர் யார் என்றும் விசாரணை நடத்த வேண்டும். தவறான தகவல்களை வழங்கியிருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி ஊழல்களின் குகையாக உள்ளது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x