Published : 11 Nov 2017 11:10 AM
Last Updated : 11 Nov 2017 11:10 AM

சசிகலா, தினகரன் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை: 40 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற பெயரில் தொடங்கினர். 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) சோதனை தொடர்ந்தது. இரண்டாவது நாளில் 40 இடங்களில் சோதனை முடிந்து, 147 இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதற்காக, டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயா டிவி அலுவலகம், அதன் இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, திருத்துறைப்பூண்டி, புதுச்சேரியில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட 40 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. மன்னார்குடியில் திவாகரனின் கல்லூரி உட்பட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின்போது ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதுடன், அதுகுறித்த விவரங்களை பதிவு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x