Published : 03 Aug 2023 04:07 AM
Last Updated : 03 Aug 2023 04:07 AM
திருவண்ணாமலை: செல்லங்குப்பம் கிராமத்தில் காவல் மற்றும் வருவாய்த்துறை பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுமக்கள் சார்பில் முக்கிய நாட்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதே கிராமத்தின் காலனி பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கும் காளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
செல்லங்குப்பம் கிராமம் மற்றும் காலனி பகுதியைச் சேர்ந்த இரண்டு தனி நபர்கள் இடையே மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முகநூல் வழியாக தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் வேட்டவலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், செல்லங் குப்பம் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘தங்கள் ஊரின் மையப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும், பொங்கலிடவும் சிலர் தடுத்து வருகின்றனர். எங்கள் பகுதி மக்கள் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி ஊர்வலமாக சென்று வழிபட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், செல்லங்குப்பம் கிராமத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர்கள் டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), மணிவண்ணன் (வேலூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். இதற்கு, பொதுமக்கள் தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் பதற்றமான சூழல் தவிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக மாரியம்மன் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை இன்று மாறியதாக வழிபாடு நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஒரு தனிப்பட்ட நபர் அவருக்கு ஆதரவான அமைப்பின் பெயரில் கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்துவதாக கூறியதற்கு, மற்றொரு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய தடை இருப்பதாக எங்கள் விசாரணையில் தெரியவில்லை.
ஆலய நுழைவு போராட்டம் அறிவித்த நிலையில் பொது மக்கள் நேற்று கோயிலை திறந்து வைத்து தயாராகவே காத்திருந்தனர். ஊர்வலமாக வந்த மக்கள் வழிபாடு செய்த நிலையில் அதன் பிறகு பொதுமக்களும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். எங்கும் சிறிய எதிர்ப்பு கிளம்பவில்லை. அமைதியாக முடிந்தது’’ என்றனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் பதற்றமான சூழல் தவிர்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT