

கடந்த 67 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 65 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் என, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர் டாக்டர் அசோக் சித்தார்த் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி சுயமரி யாதை திருவிழாவும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக் கூட்ட மும் நடைபெற்றது.
இதில் அசோக் சித்தார்த் பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள அத்தனை உரிமைகளும் நமக்கு கிடைக்க வேண்டும் எனில், ஓட்டுரிமையை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
கடந்த 67 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 65 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இதுதான் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு அளித்திருக்கும் நன்கொடை” என்றார்.
கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது உரையில், சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் வாய்ப்பை அளிக்காமல், அவர்களுக்கு ஓட்டுப் போட பணம் கொடுத்து அவர்களுடைய ‘‘சுயமரியாதையை இழக்கச் செய்கின்றனர். மாயாவதி ஆட்சிக் காலத்தில் அனைத்து பிரிவு மக்களுக்கும் இலவச கல்வி அளிக்கப்பட்டது. தனியார் துறையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்த ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான்” என்றார்.