Published : 10 Nov 2017 09:08 AM
Last Updated : 10 Nov 2017 09:08 AM

முறைகேடாக சட்டம் படித்தவர்களை களையெடுக்காமல் பார் கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது: நீதிபதி என்.கிருபாகரன் அதிரடி உத்தரவு

முறைகேடாக சட்டம் படித்தவர்களைக் களையெடுக்காமல் பார் கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தற்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் பார் கவுன்சிலின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் பார் கவுன்சில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வெளிமாநிலங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளவர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கவும் பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி மற்றும் வழக்கறிஞர் பதிவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சிங்காரவேலன், எஸ்.சிலம்பணன் மற்றும் வழக்கறிஞர்கள் என்.சந்திரசேகரன்,என்.ராஜன், நர்மதா சம்பத் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆவணங்களை சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எ.கிருபாகரன் அதிரடியாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: முறைகேடாக சட்டம் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள்தான் கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களிலும் அதிகமாக ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர்களின் அடிப்படைக் கல்வி மற்றும் சட்டப் படிப்பு சான்றிதழ்களைச் சரிபார்க்க உத்தரவிட்டதுமே அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவரான பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளரான ராஜகுமாருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே அவர்களுக்கும், தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுகிறேன். மேலும், முறைகேடாக சட்டம் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களை களையெடுக்காமல் பார் கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது.

ஏனெனில் முறையாக சட்டம் படித்து தொழிலில் பயபக்தியுள்ள சரியான வழக்கறிஞர்கள் வாக்களித்தால்தான் பார் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடக்கும். அதுபோல முறையான வழியில் சட்டம் பயின்று பணி ஓய்வுக்குப் பிறகு வழக்கறிஞர்களாகத் தொழில் செய்பவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே இந்த உத்தரவை மத்திய சரிபார்ப்பு கமிட்டித் தலைவராக உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அணில் ஆர்.தேவ் முன்பாக சமர்ப்பித்து, அடிப்படை கல்வித் தகுதி இல்லாமல் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள். முழுநேரமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே வெளி மாநிலங்களில் சட்டம் பயின்று, பணிஓய்வுக்குப் பிறகு வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து அதன் மூலமாக வழக்கறிஞர்களாக பதிவுசெய்தவர்கள், குற்றப்பின்னணியை மறைத்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் ஆகியோரை அகில இந்திய பார் கவுன்சில் களையெடுக்க வேண்டும். இந்த ஆய்வுக்கு சம்பந்தப்பட்டவர்களி்ன் வருமானவரிக் கணக்கு அல்லது குடும்ப அட்டையை ஆதாரமாக எடுத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x